அப்பாவின் இறுதிச்சடங்கிற்காக அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் பரிதாப நிலையில் மீட்பு : கண்கலங்க வைத்த சம்பவம்!!

1052

கண்கலங்க வைத்த சம்பவம்

தமிழகத்தில் கஜா புயலில் இறந்த தந்தையின் இறுதி சடங்கிற்காக அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 10-வயது சிறுவன் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தான்.

அதன் பின் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தியிருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்டா பகுதிகளை உலுக்கு எடுத்த கஜா புயலின் காரணமாக தென்னை மரம் இந்த சிறுவனின் தந்தை மீது விழுந்ததால், அவர் பரிதாபமாக இறந்தார்.

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட பணம் இல்லாததால், சிறுவன் 6000 ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டான். ஒரத்தநாடு அருகே உள்ள பொட்டலங்குடிக்காட்டை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் அந்த சிறுவனை அடமானமாக வாங்கி ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இந்த தகவல் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் மற்றும் பொலிசார் ஒரத்தநாடு சென்று, மேலவன்னியப்பட்டு பகுதியில் ஆடுமேய்த்துக்கொண்டு இருந்த சிறுவனை அதிகாரிகள் குழுவினர் மீட்டனர்.

அதன் பின் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிறுவனுக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், விடுதலை சான்று வழங்கி உத்தரவிட்டார். மேலும் அடமானத்துக்கு வாங்கிய மகாலிங்கம் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.