இன்ஸ்டா மூலம் அறிமுகம்… கணவருக்கு தெரியாமல் வளர்ந்த நட்பு : இறுதியில் ரூ.1.63 கோடியை இழந்த அரசு ஊழியர்!!

1348

மஹாராஷ்டிரா…

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள டோம்பிவலியில் ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண் அரசின் உயர் பதவியில் வேலை செய்துவந்துள்ளார். சமூகவலைத்தளங்களில் அதிகம் ஈடுபாடுகொண்ட அந்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

தான் இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரை சேர்ந்தவர் என்றும், தனது பெயர் ஹெம்ஸ் மிக்கேல் என்றும் கூறியுள்ளார். இவர்களது இந்த உரையாடல் ஒரு மாதமாக தொடர்ந்துள்ளது. அதன்பின்னர் இருவரும் நம்பரை பகிர்ந்து வாட்ஸ்சப்பில் உரையாடியுள்ளனர்.

தனது கணவருக்கு தெரியாமல் அந்த பெண் இந்த நபரோடு தொடர்ந்து பேசிவந்துள்ளார். இந்த தருணத்தில் அந்த இங்கிலாந்து நபர் தான் இந்தியா வரவுள்ளதாகவும் வந்து உங்களை சந்திக்கவிருப்பதாகவும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 21-ம் தேதி அந்த பெண்ணுக்கு போன் செய்த அந்த நபர் தான் இந்தியா வந்ததாகவும், ஆனால் கொரோனா தடுப்பூசி போடாததால் டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் என்னுடன் 85 ஆயிரம் டாலர் இருப்பதாகவும் தன்னை விடுவிக்க உதவுமாறும் கூறியுள்ளார்.

அதன்படி அந்த பெண்ணை தொடர்புகொண்ட சிலர் சுங்க வரி கட்டவேண்டும் என்று கூறி குறிப்பிட்ட பணத்தை அப்பெண்ணிடமிருந்து வசூலித்தனர். அவர் அதை கொடுத்ததும், பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் விசாரணைக்கு ஆளாக வேண்டியது இருக்கும் என்று மிரட்டி கடந்த 5 மாதத்தில் ரூ.1.63 கோடியை பறித்துள்ளார்.

அதன்பின்னர் அந்த கும்பல் மேலும் 44 லட்சம் கேட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது தொடர்பாக தனது கணவரிடம் கூறியுள்ளார்.

அவர் அறிவுறுத்தலின்படி உடனே காவல்நிலையத்துக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.