திருநெல்வேலி…..
திருநெல்வேலி மாவட்டம் ஆலடியூரில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இங்குள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கையை சேர்ந்த இர்பான் முகம்மது (34) என்பவர் தனது மனைவி ஜூட்மேரிசுசி, மகள்கள் இஷானா (8), இஷ்ரா (5) ஆகியோருடன் கடந்த மாதம் வந்தார்.
1 மாதமாக இங்கே தங்கி இருந்த இர்பான் முகம்மது பெயிண்டிங் வேலைக்கு சென்றுவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக இர்பான் முகம்மது தனது குடும்பத்துடன் சென்றார்.
குளித்துக் கொண்டு இருக்கும்போது சிறுமி இஷானாவை தண்ணீர் இழுத்துச் சென்றது. இதை பார்த்த இர்பான் முகம்மது தனது மகளை காப்பாற்ற முயன்றார். ஆனால் தண்ணீரின் வேகத்தை எதிர்கொள்ள முடியாததால் அவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.
இதை பார்த்து கரையில் நின்ற ஜூட்மேரிசுசி அதிர்ச்சி அடைந்து காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் இர்பான் முகம்மது, இஷானா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி 2 பேரின் உடல்களை தேடினார்கள்.
3 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் உறவினர்களை பார்க்க வந்த இர்பான் எதற்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.