ஒரே வீட்டில் அண்ணன் – தம்பி இருவரும் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை… நெஞ்சை உலுக்கிய சோக சம்பவம்!!

1283

நெல்லை..

நெல்லை மாவட்டம், மானூர் அருகே அய்யூப்கான் புரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மனைவி செல்லத்தாய், இவர்களுக்கு சுடலைமணி (25), நாராயண பெருமாள் (15) என்ற இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அய்யாதுரை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில் செல்லத்தாய் கூலி வேலை பார்த்து வந்தார்.

அண்ணன் சுடலைமணி வேன் டிரைவராக பணியாற்றி வரும் நிலையில் அவரது சகோதரர் சிறுவன் நாராயண பெருமாள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சிறுவன் நாராயண பெருமாள் தனது நண்பர்களுடன் சேர்ந்து சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனை அறிந்த அண்ணன் சுடலைமணி தம்பியை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாராயண பெருமாள் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த சுடலைமணி தன்னால் தான் தனது தம்பி தற்கொலை செய்து கொண்டார் என்ற மன வேதனையில் வீட்டின் முற்றத்தில் உள்ள தகரக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மானூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை இழந்த நிலையில் அண்ணன், தம்பி இருவரையும் அவர்களது தாய் செல்லத்தாய் கவனித்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை அறிந்து மூத்த மகன் சுடலைமணி கூலி வேலை பார்த்து தனது தாய்க்கு உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் மகன்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் தாய் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.