கண்ணீருடன் கேரள மக்களின் நிலையை உணர்த்திய குட்டி நாய் : அதை மீட்டு உணவளித்த அந்த தமிழன் யார் தெரியுமா?

840

பெரு வெள்ளம் காரணமாக கேரளாவில் இருந்த கால்நடைகள் ஆடு, மாடு, நாய் போன்ற ஏராளமானவை உயிரிழந்தன.

அவை அனைத்தும் தண்ணீரில் மிதந்து வந்தைக் கண்ட கேரள மக்கள் ஆசையாக வளர்த்து வந்தவை எல்லாம் இப்படி இறந்துவிட்டதே என்று கண்ணீர் மல்க கூறியிருந்தனர்.

இந்நிலையில் திருச்சூர் மாவட்டம், சாலக்குடி அருகே ஒரு கிராமத்தில், உணவின்றி அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த, ஒரு குட்டி நாயை மீட்டு, சென்னையைச் சேர்ந்த சினிமா உதவி இயக்குநர் பாலா உணவளித்திருக்கிறார்.

இது குறித்து அவர் பிரபல தமிழ்நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இரண்டு வாரங்களுக்கும் மேலாக இங்குதான் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

அப்போது சாலக்குடியிலிருந்து 10 கி.மீற்றர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்ற போது, அங்கு ஒரு குட்டியை நாயைப் பார்த்தோம்.

அந்த குட்டியை பார்த்த போது, சாப்பிட்டு பல நாட்கள் ஆகியிருப்பது போன்று தெரிந்தது. இதனால் அதை உடனடியாக தூக்கி புட்டியில் பால் கொடுத்தோம்.

வெள்ளம் அதிகமாக இருந்தபோது, பள்ளத்தில் இருந்த இந்தக் குட்டி நாயை, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேட்டுப் பகுதியில் சேர்த்துள்ளார்.

ஆனால், அந்த குட்டிக்கோ அங்கிருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் கண்ணீர்விட்ட படி அதிர்ச்சியில் உறைந்து நின்றுள்ளது,தற்போது, அந்தக் குட்டி நாய் நலமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

கண்ணீர் வடித்த நிலையில் பசிக்கு ஏங்கிய குட்டி நாயின் நிலைமையானது, கேரள மக்களின் உண்மையான நிலைமையை உணர்த்தியுள்ளது என்றே கூறலாம்.