ராணிப்பேட்டை….

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடியை சேர்ந்த சக்திவேல் என்ற 32 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த அருள் மகள் வனிதாவை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு அருள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த வனிதா ஓராண்டுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

வனிதாவின் தற்கொலைக்குப் பின்னர் அவரின் மரணத்திற்கு காரணம் சக்திவேல் தான் என்று அருள் பிரச்சனை செய்ய இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் தனியார் பேருந்தின் ஓட்டுனரான அருள், கடந்த ஏப்ரல் மாதம் மகேந்திரவாடி அருகே தனியார் பேருந்தை ஓட்டி வந்தபோது அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சக்திவேல் மீது பேருந்தை மோதி விபத்து ஏற்படுத்தி இருக்கிறார்.

இதில் சக்திவேலுக்கு வலது கால் துண்டிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னர் அவர் ஜேசிபி இயந்திரத்தை ஓட்டி பிழைத்து வந்திருக்கிறார் .

இதனால் தொடர்ந்து சக்திவேலுக்கு அருள் மேல் கோபம் இருந்து வந்திருக்கிறது. அவரின் எதிர்ப்பினால் தானே காதலியையும் இழந்து ஒரு காலையும் இழந்து இப்படி அவஸ்தைப்பட வேண்டியதாக இருக்கு என்று ஆத்திரத்தில் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு நேற்று இரவு அருளின் மாடி வீட்டின் முன்பகுதியை இடித்துத் தள்ளியிருக்கிறார்.

இடித்து தள்ளிவிட்டு ஜேசிபி இயந்திரத்தில் தப்பிச் செல்ல முயன்று இருக்கிறார். அப்போது பின்னாலேயே ஓடி வந்த அருளும் அவரது மகன் தினேஷும் ஜேசிபி இயந்திரத்தை மடக்கி வாகனத்தின் உள்ளே ஏறி, கத்தியால் சக்திவேலை சரமாரியாக குத்தி இருக்கிறார்கள் .

படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்த சக்திவேலை உறவினர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதன் பின்னர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்து விட்டார்.

இது தெரிந்ததும் அருளும் அவரது மகன் தினேஷும் தலைமறைவாகி விட்டார்கள். சக்திவேல் உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அருளையும் தினேஷையும் தேடி வருகின்றார்கள்.