தென்காசி…..
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள வட்டடாலூரை சேர்ந்தவர் முத்துராமலிங்க ராஜன். இவர் பழைய இரும்பு வியாபாரியாவார். இவருக்கு உஷா எனும் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இப்படி இருக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டுப்பகுதி ஒன்றில் முத்துராமலிங்க ராஜன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். மனைவி உஷாவிடம் விசாரணை நடத்தியபோது இந்த கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று கூறியிருந்தார். இதனால் மற்றவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். ஆனால் வெற்வேறு நபர்களிடம் விசாரணை செய்ததில் சந்தேகம் எழாத நிலையில், உஷாவிடம் மட்டும் தொடர்ந்து மழுப்பல் பதில்களே கிடைத்தன.
இதனையடுத்து உஷாவிடம் கிடுக்குபிடி விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டனர். விசாரணையில் உஷா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, உஷாவின் கணவன் வேலை பார்த்து வந்த கடையின் முதலாளியான கடல்மணி என்பவருக்கும் உஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் இதற்கு இடையூறாக உள்ள முத்துராமலிங்க ராஜனை என்ன செய்வது என்று யோசித்துள்ளனர்.
இதனையடுத்து ராஜனை கொலை செய்வதென இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆள் அரவமற்ற காட்டுக்குள் ராஜனை பேச்சுவாக்கில் அழைத்து சென்றுள்ளார் கடல்மணி. பின்னர் அங்கேயே அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். உஷா திட்டம் தீட்ட கடல்மணி கொலை செய்ய ராஜன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்த விஷயம் காவல்துறையினருக்கு தெரிய வரவே உஷாவை காவல்துறை கைதுசெய்தது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த கடல்மணியை தூத்துக்குடியில் இன்று காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மார்த்தாண்டத்தை சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.