நடந்த அதிர்ச்சி

தம்பி காதல் திருமணம் செய்ததால் பெற்றோரை பொலிசார் கடத்தி சென்றுவிட்டதாக பேராசிரியை ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆல்பர்ட்தாஸ். இவர் மனைவி அன்புலதா.

இவர்களின் மகன் அப்சல் ஜெனிஷ் (22). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த நிலையில் உடன் படித்த சுரேகா என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீட்டை விட்டு ஓடிய ஜோடி கடந்த 25ஆம் திகதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சுரேகாவைக் காணவில்லை என அவரின் அப்பா மனோகரன் பொலிசில் புகாரளித்த நிலையில் ஜெனிஷ் பெற்றோர் ஆல்பர்ட்தாஸ் மற்றும் அன்புலதாவை பொலிசார் விசாரணைக்காக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இதனிடையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற அப்பா, அம்மா எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும் அவர்களை சட்ட விரோதமாக பொலிசார் கடத்தி சென்று காவலில் வைத்திருப்பதாகவும் மாநில மனித உரிமை ஆணையம், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அவர்களின் மகளும், பேரசிரியையுமான ஜெனிபா கண்ணீர் புகார் மனு அளித்துள்ளார்.

ஜெனிபா கூறுகையில், அம்மாவும் அப்பாவும் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய அம்மாவின் செல்போனில் பேசிய எஸ்.ஐ. விசாரித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். எதற்காக அவர்களிடம் விசாரிக்க வேண்டும்? பொலிசுக்கு பயந்து என்னுடைய தம்பியும், அவரின் மனைவியும் தலைமறைவாக உள்ளனர் என கூறினார்.

இதற்கிடையில் அன்புலதா, உறவினர் ஒருவரிடம் போனில் பேசியுள்ளார். சென்னையில் உள்ள ஹோட்டலில் ஏசி அறையில் தங்கியிருக்கிறேன். புடவை, சாப்பாடு தந்தார்கள். ஆனால், வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். அதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்று அந்த உறவினர் பதற்றத்துடன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.