கார் வாங்கியதால் அரங்கேறிய கொலை : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

367

சென்னை…..

சென்னையை அடுத்த புழலில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பொறாமையில் முதியவரை கொடூரமாக தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புழல் சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் 61 வயதான பரதராமர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட இவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு புழல் பகுதியில் இடம் வாங்கியிருக்கிறார். காலி மனையாக இருந்த இடத்தில் சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டத் துவங்கி, கடந்த மாதம் 24ஆம் தேதிதான் புதுமனை புகுவிழாவும் நடத்தியுள்ளார்.

பரதராமர் வாங்கியுள்ள இடத்தை ஒட்டி குமரன் என்பவரின் வீடு உள்ளது. புழல் பகுதியை பூர்வீகமாக கொண்ட குமரன் வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் நடுவில் உள்ள 10 அடி அகலமுள்ள பாதை வழியாகத்தான் பரதராமரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

மொத்தமாக 150 அடி பரப்பளவு கொண்ட அந்த இடத்தையும் சம்பத் என்பவரிடமிருந்து ஓராண்டுக்கு முன்புதான் பரதராமர் வாங்கி இருக்கிறார். அங்கு தனது காரையும் நிறுத்தி வந்துள்ளார் பரதராமர். கார் நிறுத்துவதை கண்டு பொறாமை கொண்ட குமரன் அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் எனக் கூறி, மிரட்டி அடாவடி செய்துள்ளான்.

தன்னிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாக பரதராமர் கூறியும் அதனை கேட்காமல், பழுதான, பயன்படாத, பழைய சுமோ கார் ஒன்றை அந்த பாதையில் கொண்டு வந்து குமரன் நிறுத்தியுள்ளான். இதனால் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு அந்தப் பாதை அடைபட்டுப் போகவே, பரதராமர் போலீசில் புகாரளித்துள்ளார்.

போலீசார் வந்து குமரனுக்கு அறிவுரை கூறி காரை அப்புறப்படுத்துமாறு கூறிச் சென்றுள்ளனர். ஆனாலும் அடங்காத குமரன், அடாவடியாக தனது காரை அங்கேயே நிறுத்தி இருந்துள்ளான்.

புதுமனை புகுவிழாவுக்காக கடந்த மாதம் 24ஆம் தேதி வீட்டுக்கு வந்து சென்ற உறவினர்கள், தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்துள்ளனர். இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற பரதராமர் குமரனிடம் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார்.

அந்தப் பிரச்சனை முற்றிய நிலையில், கடந்த 30ஆம் தேதி உருட்டுக் கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கூட்டாளிகளை அழைத்துச்சென்ற குமரன், பரதராமரை கடுமையாகத் தாக்கியுள்ளான்.

இதில் பலத்தகாயமடைந்த பரதராமர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை காலை சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த குமரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

வெளியூரில் இருந்து வந்து பரதராமர் உழைத்து சம்பாதித்து சொந்தமாக நிலம் வாங்கி வளர்ச்சி அடைந்ததை பொறுத்துக் கொள்ள இயலாத பொறாமையால் குமரன்தொடர்ந்து அடாவடித்தனம் செய்துள்ள குறித்து போலீசில் பலமுறை புகாரளித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டும் பரதராமரின் உறவினர்கள்,

அப்போதே போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் கொலை வரை சென்றிருக்காது என்கின்றனர். கொலையில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டும் எனக் கூறி, பரதராமரின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதனத்திற்கு பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.