சாதி வெறி
தெலுங்கானா மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆறு மாதங்களுக்கு பின்னர் பெண்ணின் குடும்பத்தாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

24 வயதேயான இளைஞர் பிரனாய் கொல்லப்பட்டது அவரது தந்தையான பாலசுவாமியை பெரிதும் பாதித்துள்ளது.

உங்கள் மகளை அழைத்துச் செல்ல வேண்டியது தானே, ஏன் எனது மகனை கொலை செய்தீர்கள் என கண்ணீருடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரனாய் மற்றும் அம்ருதா காதலுக்கு கடைசி வரை மறுப்பு தெரிவித்து வந்த தாயார் பிரேமலதா, நடந்த சம்பவங்களை வாழ்நாளில் மறக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.

கண்முன்னே கணவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாமல் நினைவை இழந்த நிலையில் அம்ருதா மருத்துவமனையில் உள்ளார். 21 வயதேயான அம்ருதாவின் தந்தை மாருதி ராவு நகரின் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவர்.
அவரது வெள்ளை நிற Ford Fortuna நகரில் அவரது அடையாளமாகவே உள்ளது. சம்பவம் நடந்த வெள்ளியன்று மாருதி ராவின் வெள்ளை நிற Ford Fortuna ஐதராபாத் நகரம் நோக்கி புறப்பட்டு சென்றதை பலரும் கவனித்துள்ளனர்.
மட்டுமின்றி கார் புறப்பட்டு சென்றதன் ஒருமணி நேரத்திற்கு பின்னர் குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி பிரனாய் மற்றும் அம்ருதாவின் திருமண வீடியோ ஒன்றை சமீபத்தில் பேஸ்புக்கில் அவர்கள் பதிவேற்றியதாகவும், அதுவே இந்த கொலைக்கு மூல காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் பிரனாயின் உறவினர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் குறித்த வீடியோ வெளியானதன் பின்னர் நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, திருமண வீடியோவை விடவும் உனது மரண வீடியோ அதிக வரவேற்பை பெறும் என மிரட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி திருமண நாள் வரவேற்பு நிகழ்ச்சி முடிவடைந்த மூன்றாவது நாள் இந்தி மொழி பேசும் ஒருவர் பிரனாய் வீட்டுக்கு வந்து அவர்களது காரை வாடகைக்கு கிடைக்குமா எனவும் கேட்டுள்ளதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
குறித்த நபர் தொடர்பில் பிரனாய் குடும்பத்தினர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் கண்காணிப்பு கமெரா காட்சிகளையும் ஆதாரமாக அளித்துள்ளனர்.