300 கி.மீ பயணம்……….
தனது திருமணத்தன்று முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தன் தாத்தாவை 300 கி.மீ பயணம் செய்து மணப்பெண் கோலத்தில் பேத்தி சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று லண்டனில் நடந்துள்ளது.
லண்டனில் கிரஹாம் பர்லி எனும் முதியவர் தனது குடும்பத்திலிருந்து விலகி பராமரிப்பு இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்தச் சூழலில் அவரது பேத்திக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரால் தனியாக பயணம் செய்ய முடியாததால் தனது பேத்தியின் திருமணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. அவர் மிகவும் வயதானவர் என்பதோடு அவருக்கு “பார்கின்சன்” என்ற நடுக்குவாத நோயும் உள்ளது.
மணப்பெண்ணான அவரது பேத்தி அலெக்ஸ் பியர்ஸ் (36) ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். அவர் தனது தாத்தா இந்த விஷயத்தில் ஏமாற்றமடைந்துவிடக் கூடாது என நினைத்தார். அவர் தன்னை திருமணக் கோலத்தில் தன் தாத்தா காண வேண்டும் என விரும்பியுள்ளார்.
மற்ற மணப்பெண்கள் திருமணமான கையோடு தேனிலவுக்கோ தங்களின் புகுந்த வீட்டிற்குகோ செல்வது வழக்கம். ஆனால் அலெக்ஸ், மணமகனுடன் தன் காரில் ஏறினார். தனது திருமண உடையில் கேக்கையும் வைனையும் எடுத்துக்கொண்டு தாத்தாவைக் காண கிட்டத்தட்ட 320 கி.மீ. பயணம் செய்தார்.
இத்தகைய ஒரு நன்நாளில் தனது பேத்தியைக் கட்டியணைக்கும் வாய்ப்பை அவருக்கு கொரோனா தொற்றுநோய் சூழ்நிலை வழங்கவில்லை. என்றாலும், அவர் தனது பேத்தியைக் கண்டு திகைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டார். மூவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.