தூத்துக்குடி நகரில் ஏற்பட்ட கலவரத்திற்கு பின் ட்ரொன்கள் மூலமாக மக்களை கண்காணித்து வருகிறது காவல்துறை.ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒட்டி நடந்த கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் அவ்வப்போது பெட்ரோல் குண்டுகளை காவல்துறை வாகனங்கள் மீது வீசி வருவதாக கூறப்படுகிறது.இதனால் பதற்ற நிலை காரணமாக கமாண்டோ படையினர் தூத்துக்குடியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
இணையதள சேவை முடக்கம், உணவுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலைமை என பலவிதங்களில் தூத்துக்குடி நகரம் முழுக்க கமாண்டோ கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இதில் ஒரு பகுதியாக தூத்துக்குடி மக்களை பறக்கும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கின்றனராம் கமாண்டோ படையினர்.அது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
காரணம் தூத்துக்குடி மாநகரில் பல வீடுகளில் கழிப்பறைகளில் மேற்கூரை இருப்பதில்லை. பறந்து கொண்டிருக்கும் டிரோன்கள் பெண்கள் குளிப்பது மற்றும் கழிவிடம் செல்வதை படம் எடுத்து அனுப்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இது இந்திய தண்டனை சட்டப்பிரிவான 509ன் படி பெண்களின் மாண்பை குலைக்கும் ஒரு குற்றமாகும்.
பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் தீவிரவாதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அவர்களை கொல்லவும் இந்த வகையான ட்ரோன்கள் பயன்படும். இதனை சொந்த நாட்டுக்குள், உழைக்கும் சாமானிய மக்கள் வாழும் பகுதிகளில் இதுபோன்ற டிரோன்களை பறக்கவிட்டுள்ளது அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.