தெருநாய் கடித்துவிட்டால் என்ன செய்வது?

1042

இருளை கண்டாலே பயப்படாத நபர்கள் கூட தெருநாயை கண்டால் பயந்து நடுங்குவார்கள். அதுவும் யாரும் இல்லாத தெருவில் நடந்து செல்ல வேண்டும் என்றாலே பயம் அதிகம் தான் இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் 60 ஆயிரம் பேர் வெறி நாய்க்கடியால் இறந்து போகிறார்கள். சில நாடுகள் கூட வெறிநாயை கேடயமாக பயன்படுத்துவதை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

இந்நிலையில் தெருநாய் கடித்து விட்டால் செய்ய வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?
முதலில் வெறி நாயோ, தெரு நாயோ வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, எலியோ கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் 10 முறை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

பொதுவாக விலங்குகளில் இருந்து தாக்கும் ரேபிஸ் வைரஸ் எச்சில் மூலமாகவே பரவக்கூடியது, உடலில் தோல்கள் கிழியாத பட்சத்திலோ எந்தக் காயத்திலும் நோய்க்கிருமி பரவாது.

தோல் கிழிந்து நாயின் எச்சில் மூலம் ரத்தத்தில் கிருமி வைரஸ் தொற்றினால் நம் உடலிலும் பரவ வாய்ப்புள்ளது, அந்நேரத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

குறிப்பாக Rabbies Immune Globulin என்ற தடுப்பூசியை காயத்தை சுற்றிலும் போடுவது அவசியம், இதன்மூலம் வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க முடியும்.

தடுப்பூசி
தெரு நாய் கடித்துவிட்டால், அதற்கான ‘ARV’ எனும் ரேபீஸ் தடுப்பூசியைக் கண்டிப்பாகப் போட்டுக்கொள்ள வேண்டும். நாய் கடித்த அன்றே இதைப் போடத் தொடங்கிவிட வேண்டும். நாய் கடித்த அன்று முதல் ஊசி, 3-வது நாள் 2-வது ஊசி, 7-வது நாள் 3-வது ஊசி, 14-வது நாள் 4-வது ஊசி, 28-வது நாள் 5-வது ஊசி என 5 தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும். காயம் கடுமையாக இருந்தால், 6-வது ஊசியை 90-வது நாளில் போட்டுக்கொள்ளலாம்

இதன் வீரியம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும், 5 ஆண்டுகளுக்குள் ஊசி போட்ட ஒரு ஆண்டு கழித்து நாய் கடிப்பட்டால் மீண்டும் ஊசி போடுவது அவசியம், உணவுக் கட்டுப்பாடுக்கு அவசியமில்லை.

என்ன செய்யக்கூடாது?
1.காயத்துக்கு கட்டுப் போடக்கூடாது. 2.சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்து விடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருப்பது நல்லது. 3.திறந்த காயமென்றாலும், ஆழமான காயமென்றாலும் தையல் போட்டு மூடக்கூடாது. 4.நாய் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக்கூடாது. அப்படித் தடவினால் கிருமிகள் உடலைவிட்டு வெளியேறுவது தடைபடும்.