மாணவி எரித்துக்கொலை

பங்களாதேஷ் நாட்டில் பாலியல் புகார் கொடுத்த மாணவியை பள்ளி வளாகத்தில் வைத்து உயிருடன் எரித்துக்கொலை செய்த 16 பேர் தற்போது மரண தண்டனையை எதிர்கொள்ள உள்ளனர்.

பங்களாதேஷை சேர்ந்த நஸ்ரத் ஜஹான் (16) என்கிற பள்ளி மாணவி, கடந்த மார்ச் 27ம் திகதியன்று பள்ளி தலைமை ஆசிரியர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் புகார் தெரிவித்தார்.

அதனை வீடியோவாக பதிவு செய்த பொலிஸார், “இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை” என நஸ்ரத்தை அதட்டி முகத்தில் வைத்திருந்த கையை எடுக்குமாறு கூறி வீடியோ எடுத்துள்ளார்.

அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அப்போது சில பள்ளி மாணவர்கள், நஸ்ரத் மீது தான் தவறு உள்ளது எனவும், தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் போராட்டம் நடத்தினர்.இதனால் மாணவி பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பள்ளி இறுதி தேர்வு நடந்த சமயத்தில் தன்னுடைய சகோதரனை துணைக்கு அழைத்துக்கொண்டு நஸ்ரத் சென்றிருக்கிறார். அங்கு நஸ்ரத் மட்டும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, அவருடைய சகோதரன் வெளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளார்.

உள்ளே சென்ற நஸ்ரத்தை திடீரென சூழ்ந்துகொண்ட சிலர், கடுமையாக தாக்கி மாடிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நின்றுகொண்டிருந்த சில மாணவிகள் அவருடைய கைகளை கட்டி, உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளனர்.

80 சதவிகித காயங்களுடன் அங்கிருந்து தப்பிய மாணவி, இறந்துவிடுவதற்குள் தன்னுடைய சகோதரனின் செல்போனில் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஏப்ரல் 10ம் திகதியன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவமானது அந்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். இந்த நிலையில் வழக்கினை விசாரித்த வந்த புலன் விசாரணைத்துறை தலைவர், நாங்கள் இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ளோம்.

கைது செய்யப்பட்டிருக்கும் 16 பேருக்கும் வழக்கறிஞர்கள் உயர்ந்த தண்டனையான மரண தண்டனையை கோரியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.