பிரான்சில்………
பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் Vauréal (Val-d’Oise) வொரோயால் தமிழ் கலாசார மன்றத்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் Vauréal (Val-d’Oise) வொரோயால் தமிழ் கலாசார மன்றம் மற்றும் மதுரை உலக தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து ‘முத்தமிழ் விழா-2020’-ஐ நேற்று (16/11/2020) நடத்தியது.
இந்த விழாவுக்கு, மதுரை உலக தமிழ்ச்சங்கத்தின் இயக்குனர் அன்புச்செழியன் தலைமை தாங்கியதுடன், காணொளி காட்சி மூலமாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதன்போது அவர் கூறுகையில், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமே அல்ல. அதுதான் நமது வாழ்வின் வழி. நம்முடைய அடையாளம். உலகமொழிகளுக்கெல்லாம் உயர் மொழியாய் திகழ்வது, நமது அன்னை தமிழ்மொழியே ஆகும்.
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என பழந்தமிழர்கள் முச்சங்கம் அமைத்து வளர்த்த தமிழைமறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா புதுமை திட்டங்கள் பல வகுத்து, அவற்றை செயல்படுத்தி தமிழ்வளர்ச்சிக்கு அவருடைய பொற்கால ஆட்சியில் அரும்பாடுபட்டார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.10 கோடி, அமெரிக்க ஹூஸ்டன்பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி, தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்குவது முதன்முதலாக எம்.ஜி.ஆரால்தான் தொடங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். காலத்தில் நான்கு விருதுகள். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 55 விருதுகள். ஜெயலலிதா வழியில்செயல்படும் ஆட்சியில் 74 விருதுகள் பெறப்பட்டுள்ளது. மதுரை உலக தமிழ்ச்சங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ரூ.40 கோடி மதிப்பீட்டில் வானுயர்ந்த கட்டிடங்கள்கட்டப்பட்டுள்ளது.
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியர் ஆய்விருக்கை, பாரதிதாசன் ஆய்விருக்கை, திருமூலர்ஆய்விருக்கை, இயற்கை மருத்துவ ஆய்விருக்கை, பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம், எம்.ஜி.ஆர். பெயரில்புதிய நூலகம்,
அங்கு 1.50 லட்சம் நூல்கள் பாதுகாப்பு, சுவடி பாதுகாப்பு மையம், ஒரு கோடி வைப்பு நிதியில் எம்.ஜி.ஆர். கலைமற்றும் சமூக பணி ஆய்வு இருக்கை, ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் பிரான்ஸ் வொரோயால் தமிழ் கலாசார மன்றம் வொரோயால் நகரில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு சிலைஅமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதை அறிந்து நான் மிகவும் பெருமிதம் அடைகின்றேன்.
இந்த மன்றத்தின் தமிழ் வளர்ச்சி பணிகளும் மனிதநேய தொண்டுகளும் இன்னும் சிறப்புடன் சிறந்தோங்கிடவாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.