இந்தியாவில் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்காததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் சல்மான் கான் (26). இவரும் மனிஷா நேகி (21) என்ற பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் ஒத்து கொள்ளவில்லை. இதையடுத்து வீட்டை விட்டு சல்மானும், மனிஷாவும் வெளியேறியுள்ளனர்.
ஆனால் குடும்பத்தினரை போன் மூலம் தொடர்பு கொண்ட அவர்கள் விரைவில் வீட்டுக்கு திரும்பி விடுவோம் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அங்குள்ள ஒரு இடத்தில் கார் ஒன்று வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது.
இதை பார்த்த மக்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் காரை சோதனை செய்தனர்.
அப்போது உள்ளே சல்மானும், மனிஷாவும் விஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ள சடலமாக கிடந்துள்ளனர்.
இருவரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுவரை இவர்கள் மரணத்தில் சந்தேகம் எழாத நிலையில் இதை தற்கொலை வழக்காகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையில் சல்மான் சில தினங்களுக்கு முன்னர் தனது சமூகவலைதள பக்கத்தில், தற்கொலை வலியை முடிவுக்கு கொண்டு வராது, நமது வலியானது மற்றவர்களுக்கு தான் போகும், இதனால் தான் நான் இன்னும் உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சல்மானின் காதல் குறித்து மனிஷா வீட்டில் பேச இருந்ததாகவும் அதற்குள் அவர்கள் இந்த முடிவை எடுத்தது அதிர்ச்சியளிப்பதாகவும் சல்மான் குடும்பத்தார் கூறியுள்ளனர்.