கணவனை தீர்த்துகட்டிய மனைவி

மதுரையில் பைனான்ஸ் தொழில் செய்தவரின் கொலை தொடர்பாக இரண்டாவது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அலங்காநல்லூர் அருகே நடராஜன் நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். வட்டி தொழில் செய்து வந்தார்.

இவர் கடந்த 31-ந் தேதி மதியம் வீட்டு முன்பு அமர்ந்திருந்த போது இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் அவரைச் சுற்றி வளைத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.

இதில் படுகாயம் அடைந்த இளங்கோவன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இளங்கோவனின் 2-வது மனைவி அபிராமி கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், அபிராமியே கூலிப்படையை ஏவி இளங்கோவனை கொன்றதாக திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இளங்கோவன், தனது 2-வது மனைவி அபிராமி(42)யின் மகளான 21 வயதான அனுசுயா-வுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அபிராமி கண்டித்துள்ளார்.

மேலும் அனுசுயாவை வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். அதன்பிறகும் இளங்கோவன், அனுசுயாவை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நான், அனுசுயாவுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி இளங்கோவனை கொன்றேன் என்று அபிராமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் போலீசார் அபிராமி, அனுசுயாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.