மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி : கேரள மக்களுக்காக செய்த நெகிழ்ச்சி செயல்!!

1198

கேரளாவில் மாலை நேரத்தில் மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி, தனக்கு கிடைத்த உதவித் தொகையை நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளத்தின் தொடுபுழாவை சேர்ந்தவர் ஹனன்(வயது 20), தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வரும் ஹனன் மாலை நேரத்தில் மீன் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

இவர் பற்றி சமூக வலைத்தளங்களில் தகவல் பரவவே, பலரும் விமர்சித்து எழுதத் தொடங்கினர், மாணவிக்கு ஆதரவாக பல்வேறு குரல்கள் எழுந்தன.

குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையால், தாய் மற்றும் சகோதரனுக்காகவே மீன் விற்பனையில் ஈடுபடுவதாகவும், டியூசன் எடுப்பது, நகைகள் செய்வது என வேறு சில தொழில்களிலும் ஈடுபடுவதாகவும் ஹசன் விளக்கம் அளித்திருந்தார்.

இத்தகவல் வைரலாகவே, முதல்வர் பினராயி விஜயன் மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் மாணவியின் நிலைமை தெரிந்து அவரது வங்கிக் கணக்கில் பொதுமக்கள் பலரும் உதவி செய்யத் தொடங்கினர்.

இத்தொகை ரூ.1.5 லட்சமாக உயர்ந்தது, தற்போது மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அந்த தொகையை அப்படியே முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் ஹனன்.

மேலும் மக்கள் கஷ்டப்படும் போது அவர்கள் தனக்கு செய்த உதவியை திருப்பி அளிப்பதே உகந்தது என்றும், இரு தினங்களில் பணத்தை திருப்பி அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.