கன்னியாக்குமரி….
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாக்குமரியின் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணங்குட்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அவரது மகள் நித்யாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் பிரச்சனை காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக நித்தியா விவாகரத்து பெற்றுக் கொண்டு தந்தையுடன் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
மகளின் திருமணத்தின் போது கிருஷ்ணங்குட்டி பல லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதோடு சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்கும் கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் தூங்குவதற்கு முன்பாக கிருஷ்ணங்குட்டி, அவரது மகள் நித்தியா மற்றும் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி உள்ளனர். இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது மூவரும் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக மொத்த குடும்பமும் இந்த முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.