அரேபிய நாடான ஓமனில் வீட்டு வேலை செய்து வந்த பெண் ஒருவர் அந்த வீட்டாரின் சித்திரவதை தாங்க முடியாமல் வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீஜா. இவர் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாகக் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வேலை செய்துவருகிறார். இவரின் கணவர் பிஜுமோன் என்பவரும் அதே பகுதியில் மின்சார ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சீஜா பணிபுரியும் வீட்டில் அவருக்குத் தொடர்ந்து ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.மேலும், அவருக்கு அந்த வீட்டின் உரிமையாளர் உணவும் முறையாக வழங்காமல், அடித்துத் துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வீட்டிலிருந்து தப்பிக்க இரண்டாவது மாடியிலிருந்து குதித்த சீஜா, இடுப்புக்கு கீழ்பகுதி முழுவதும் செயல் இழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இதையடுத்து, அவர் ஓமன் நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் குறித்த வீட்டு உரிமையாளர், எவ்வித நஷ்ட ஈடும் வழங்காமல் சீஜாவை ஓமனிலிருந்து, அவருடைய சொந்த ஊரான கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தற்போது சிகிச்சைக்குப் பணமின்றி தவித்துவரும் சீஜா குடும்பத்தினர், இந்த நிலைமைக்கு காரணமான வீட்டு உரிமையாளரிடமிருந்து உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.