கடலூர் மாவட்டத்தில் தாயில்லாமல் வளர்ந்து வந்த தனது அண்ணனின் மகளை சீரழித்த தம்பிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கூலித்தொழிலாளியான தன்ராஜ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது அண்ணனின் 15 வயது மகளை கட்டிட வேலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இச்சிறுமியின் தாய் சிறு வயதிலேயே இறந்துவிட்டார், அக்காவுக்கு திருமணமாகி வேறு ஊருக்கு சென்றுவிட்டார். மேலும் தந்தையும் வேலைக்காக வெளியூர்களுக்கு சென்றுவிடுவதால் இச்சிறுமி தனியாகவே இருந்துள்ளார்.
இதனை தன்ராஜ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். கட்டிட வேலைக்கு அழைத்து சென்று கரும்பு தோட்டம் மற்றும் வீட்டில் வைத்தும் ஒரு ஆண்டாக பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதனை வெளியில் தெரிவித்தால் உனது தந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார், இது வெளியில் தெரிந்தால் தான் மாட்டிக்கொள்வோமா என்ற அச்சத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி சிறுமிக்கு கொடுத்துள்ளார்.
இதனால், சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தந்தை கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை, இதனைத்தொடர்ந்து ஊரில் இருந்து இச்சிறுமியின் அக்கா வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் தனது தங்கையிடம் கேட்டபோதுதான், நடந்த அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து காமுகன் தன்ராஜை சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, அவர் மீது கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட தன்ராஜிக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி லிங்கேஸ்வரன் கூறியுள்ளார்,