தந்தை செய்த அதிர்ச்சி செயல்
தமிழகத்தில் தொழிலாளி ஒருவர் தன்னுடைய 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கரசன் (40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (39). இவர்களுக்கு சுதா (16), மேகலா (10) என 2 மகள்கள் உள்ளனர்.

சிக்கரசனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் சித்ரா அவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் சுதாவும், மேகலாவும் தந்தையுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சிக்கரசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
தான் இறந்துவிட்டால் தன்னுடைய மகள்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். எனவே தற்கொலை செய்துகொள்வதற்கு முன் 2 மகள்களையும் கொலை செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து சிக்கரசன் தனது மகள்களை கூட்டி கொண்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அப்போது சிக்கரசனிடம் மகள்கள் 2 பேரும் பசிக்கிறது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து சாப்பாடு வாங்க சென்ற சிக்கரசன் உணவில் விஷத்தை கலந்து தன்னுடைய குழந்தைகள் சுதா மற்றும் மேகலாவுக்கு கொடுத்தார்.
மேலும் சிக்கரசனும் விஷம் குடித்தார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக மயங்கி கீழே விழுந்தனர்.
சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் மூவரையும் மீட்ட அவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாவும், மேகலாவும் உயிரிழந்தனர். சிக்கரசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.