இசையமைப்பாளர்
மலையாள இசையமைப்பாளரும் சிறந்த வயலின் கலைஞருமான பாலபாஸ்கரின் உடல் வயலினுடன் புதைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25-ம் தேதி, திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்குத் தன் குடும்பத்தினருடன் காரில் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுதிரும்பும்போது, பள்ளிப்புரம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் பாலபாஸ்கருக்கு பலத்த அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.
மேலும் அந்த விபத்தின்போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலபாஸ்கரின் இரண்டு வயது குழந்தை தேஜஸ்வினி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மனைவி லட்சுமி அதிக காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார். பாலபாஸ்கரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அவரது உடலுடன் அவருக்கு மிகவும் பிடித்த வயலினும் சேர்த்து புதைக்கப்பட்டது. இது, பார்ப்போர் கண்களைக் கலங்கவைத்துவிட்டது.
பாலபாஸ்கர், இறந்த தன் மகளுடன் சொர்க்கத்தில் வயலின் வாசிப்பது மற்றும் வயலினில் இருக்கும் பாலபாஸ்கர் போன்ற மனதை உருக்கும் கார்ட்டூன் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.