பீகார்……
பீகார் மாநிலத்தில் பாட்னாவை சேர்ந்த இளம்பெண் ரேகா. இந்த பெண்ணுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்திருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு காதில் வலி அதிகமாக இருந்துள்ளதால் பிரபல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கிறார். அங்கு ரேகாவின் காதினை பரிசோதனை செய்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
இதை அடுத்து கடந்த ஜூலை 11ஆம் தேதி காது அறுவை சிகிச்சைக்காக ரேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு ரேகாவுக்கு நர்சு ஒருவர் ஊசி போட்டு இருக்கிறார் . ஊசி போட்ட சிறிது நேரத்தில் கையில் வலி அதிகமாக இருந்திருக்கிறது.
சிறிது நேரத்தில் கை முழுவதும் நீல நிறமாக மாறி இருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேகாவும் உறவினர்களும் நர்சை அழைத்து சொல்லி பதறவும், கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாத அந்த நர்ஸ், மருத்துவமனையை விட்டு உடனே வெளியே சென்று விடு என்று சத்தம் போட்டு இருக்கிறார்.
பின்னர் சிறிது நேரத்தில் கையின் நிறம் கருப்பு நிறமாக மாறி இருக்கிறது. ரேகாவுக்கு வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு இருக்கிறார். இதை அடுத்து அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறி சென்று ஐஜிஐஎம்எஸ் என்ற மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து கையை உடனே நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
ஒரு கை போனதால் ரேகாவுக்கு நடக்கவிருந்த திருமணமும் நின்று போய் இருக்கிறது . அந்த சம்பவம் குறித்தும் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் ரேகா போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனாலும் போலீசார் இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இருந்துள்ளார்கள் . இதன் பின்னர் அந்த மருத்துவமனைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளார் ரேகா.
இதனால் மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்ட ரேகாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிறைய எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. ரேகாவுக்கும் குடும்பத்தினருக்கும் மிரட்டல்களும் வந்துள்ளன. இதனால் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை பத்திரிகையாளர்களை அழைத்து கண்ணீருடன் சொல்லி இருக்கிறார் . இந்த விவகாரம் பீகாரின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.