80 வயதானாலும் 70வயது மனைவி தன்னுடன்தான் வாழ வேண்டும் என்பதற்காக மனைவியை சேர்த்து வைக்ககோரி காவல்நிலையங்களின் வாயிலில் காத்திருக்கிறார் கலியபெருமாள்.
கலியபெருமாள் – சரோஜா ஆகிய இருவருக்கும் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இவர்களது மூன்றாவது மகள் அஞ்சலை வடலூரில் வசித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அஞ்சலை வீட்டுக்கு சென்ற மனைவி சரோஜா அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். மனைவி துணை இல்லாமல் வசித்து வரும் கலியபெருமாள் கூலிவேலை செய்து தன்னந்தனியாக இருந்து வருகிறார்.
பலமுறை தனது மனைவி சரோஜாவை அவர் அழைத்தபோதும் அவர் மகளை விட்டு வர மறுத்துவிட்டார். இதுகுறித்து ஏற்கனவே கலியபெருமாள், காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் மனைவியை சேர்த்து வைக்க புகார் மனு அளித்திருந்தார்.
மனைவி தன்னுடன் துணையாக இருக்க வேண்டும் என்று விடா முயற்சியுடன் கலியபெருமாள் ஒவ்வொரு காவல் நிலையமாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்.
