அதிர்ச்சியில் மரணமடைந்த மனைவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விஷத்தை குடித்து கணவன் பலியான சற்றுநேரத்தில் மனைவியும் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பெருமாள்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (55), கூலித்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (45) இருதயநோய் உள்ளவர் என கூறப்படுகிறது.

இந்த தம்பதியினருக்கு 14 வயதில் லோகேஷ் என்ற மகனும், 9 வயதில் சூரியன் என்ற மகனும் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள வெங்கடாசலம், 29ம் தேதின்று மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை மது என நினைத்து குடித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவருடைய வாயில் இருந் நுரை தள்ளியுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கடாசலம் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.

இந்த செய்தி உடனடியாக அவருடைய மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செய்தி கேட்ட அதிர்ச்சியில் அதிகாலை 2 மணிக்கு சித்ராவும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த பொலிஸார் சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அனாதையான இரண்டு சிறுவர்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.