அமெரிக்கர் ஒருவர் நல்லெண்ணத்துடன் செய்து வந்த சிறு உதவி ஒன்று அவர் இறந்ததும் நின்றுபோய்விடக்கூடாது என்று முடிவு செய்தார் அவர் மனைவி. அதற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் புல்லரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்லிக்கு எப்போதும் குப்பை எடுக்க வருபவர்கள் மீது ஒரு இரக்கம். அவர்கள் வெயிலில் படும் பாட்டைக் காண அவருக்கு எப்போதுமே பிடிக்காது.
ஒரு நாள் குப்பை லொறிக்காரர்கள் சிலர் வந்து கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்க, உடனடியாக ஓடிச் சென்று கிச்சனிலிருந்த ஒரு பெரிய மக்கில் குளிர்ந்த நீரை நிரப்பி கொஞ்சம் பிளாஸ்டிக் கப்களை எடுத்துக் கொண்டு ஓடினார் அவர்.
அவர்களுக்கு தண்ணீர் கொடுத்த விடயம் அவர்களை எவ்வளவு மகிழ்ச்சியாக்கியது என்பதைக் கண்ணாரக் கண்ட சார்லி அன்றே ஒரு பெரிய கூலரை தயார் செய்து அதற்குள் சில தண்ணீர் பாட்டிகளையும் ஐஸ் கட்டிகளையும் போட்டு வைத்தார்.
இந்த விடயம் தெரிய வந்ததும், குப்பை எடுப்பவர்கள் மட்டுமின்றி, பொலிசார், தீயணைப்பு வீரர்கள், கட்டிட வேலையாட்கள் என பலரும் அந்த இடத்திற்கு வரும்போது நின்று கொஞ்சம் தண்ணீர் அருந்திச் செல்வது வழக்கமாயிற்று. ஒரு நாள் சார்லி இறந்து போனார்.
அவர் மனைவி வெல்வெட்டிற்கோ ஆயிரம் கவலைகள். ஒரு நாள் வெயில் அதிகம் அடிக்கும்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது, தண்ணீர் வைப்பது நின்று போன விடயம்.
தன்னைத்தானே திட்டிக் கொண்டு, மீண்டும் ஒரு கூலரில் முன் போலவே தண்ணீர் பாட்டில்களை நிரப்பிய அவர், அத்துடன் தனது கணவரின் ஒரு படத்தை வைத்து ஒரு அட்டையில் ”ஒரு வேளை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், எனது கணவர் சார்லி திடீரென தனது 57ஆவது வயதில் இறந்துபோனார்.
தொடர்ந்து தண்ணீர் பாட்டில்களை வைக்க நான் முயற்சி செய்கிறேன், என்று எழுதி வைத்தார்.சற்று நேரத்தில் அவர் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தேறியது. வழக்கமாக வரும் அந்த குப்பை லாரி வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் பின் ஒருவராக கீழே இறங்கினார்கள்.
வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த திருமதி வெல்வெட் சார்லியைப் பார்த்து வரிசையாக நின்ற அவர்கள், ஒரே நேரத்தில் அவரையும் அந்த வீட்டையும் பார்த்து ஒரு சல்யூட் வைத்தார்கள்.
பின் ஒவ்வொருவராக வெல்வெட்டை நோக்கி வந்தார்கள், சிலர் அவரது கையைப் பற்றிக் குலுக்கினார்கள், சிலர் அவரை அன்புடன் அணைத்துக் கொண்டார்கள். அவர்களது அன்பை உணர்ந்து வெல்வெட்டிற்கு உடல் நடுங்கியது, கண்களை கண்ணீர் மறைத்தது.
ஒவ்வொருவரும் அவருக்கு தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன் ஆளுக்கொரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு லொறியில் ஏற, லொறி நகர்ந்தது.
அத்துடன் இந்த சம்பவம் முடியவில்லை, இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் பலரும் வெல்வெட் தன் சேவையைத் தொடர்வதற்காக பெட்டி பெட்டியாக தண்ணீர் பாட்டில்களை கொண்டு அவர் வீட்டின் முன் குவிக்க, இறந்தும் சார்லியின் சேவை அவர் மனைவி மூலம் தொடர்கிறது.