கள்ளக்காதலை கண்டித்த கணவன்.. மனைவியால் அரங்கேறிய பயங்கரம்!!

545

சேலம்…..

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே விஷம் வைத்து கொலை செய்துள்ளார். கணவனைக் கொன்று விட்டு நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி?

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் 37 வயதான சக்திவேல். இவருக்கு புகழரசி என்ற மனைவியும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட சக்திவேல் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். காலையில் அவரது மனைவி வந்து பார்த்தபோது மர்மமான முறையில் சக்திவேல் உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த கொளத்தூர் போலீசார் சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். இதனிடையே சக்திவேலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தம்பி முத்துசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசாருக்கு சக்திவேலின் மனைவி புகழரசி மீது சந்தேகம் எழுந்தது. அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்றுவிசாரணை நடத்தியதில் 29 வயதான முத்துக்குமார் என்ற இளைஞருக்கு தகாத உறவு இருந்தது தெரியவந்தது.

முத்துக்குமாரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது உண்மை தெரியவந்தது. புகழரசிக்கும், முத்துகுமாருக்கும் இடையே இருந்த கள்ளத் தொடர்பு சக்திவேலுக்கு தெரியவந்து கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த புகழரசி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வீட்டுக்கு வந்த சக்திவேலுக்கு தண்ணீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவரை மயக்கமடையச் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து விஷம் கலந்து பாலை கொடுத்சக்திவேலுக்கு கொடுத்துள்ளார். இருந்த போதிலும் சக்திவேல் உயிர் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று பயந்து, மீண்டும் விஷம் கலந்த உணவை சக்திவேலுக்கு மயக்க நிலையிலேயே கொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து புகழரசி மற்றும் முத்துக்குமாரை போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.