பலமுறை கருக்கலைப்பு

திருவண்ணாமலையில் காதலனின் ஆசைவார்த்தையில் மயங்கிய இளம்பெண்ணுக்கு பலமுறை கருக்கலைப்பு செய்த பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அதேபகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை நம்பிய இளம்பெண்ணும் பலமுறை ராமராஜுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதில் கர்ப்பமடைந்த இளம்பெண்ணை அருகாமையில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்து சென்று ராமராஜ் கருக்கலைப்பு செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்ள முடியாது எனவும், வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார்.

உடனே அந்த இளம்பெண் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலைமையிலான குழுவினர் சம்மந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அங்கு உரிய அங்கீகாரம் வாங்காமல் பயன்படுத்தி வந்த கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றினர். மேலும், படிக்காத 8 பெண்களை மருத்துவ உதவிக்கு பணியில் அமர்ந்தியிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து டாக்டர் சுகந்தி அன்பரசுவை கைது செய்த பொலிஸார் உரிய விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துவந்த ஆனந்தி என்ற பெண் 20 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டது குறிப்பித்தக்கது.