கேரள வெள்ளத்தில் 35 பேர் உயிரை காப்பாற்றிய நபருக்கு கண் பார்வை பறிபோனது : கண்ணீர் பின்னணி!!

939

கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த 35 பேர் உயிரைக் காப்பாற்றிய சதாசிவன் என்பவருக்குக் கண் பார்வை பறிபோகியுள்ளது.

கேரள வெள்ளத்தின்போது செங்கானுர் பகுதி முற்றிலும் தண்ணீரில் தத்தளித்த போது சதாசிவன் என்பவருக்கு அவரின் நண்பர் சந்தோஷிடமிருந்து போன் வந்தது.

போனில், தன் குடும்பம் உட்பட 35 பேர் வெள்ளத்தில் தவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து பதறியடித்து அங்கு சென்ற சதாசிவன், நண்பர்களுடன் இரவு முழுவதும் போராடி 35 பேரையும் வெள்ளத்திலிருந்து மீட்டார்.

மீட்புப் பணியின்போது கூர்மையான கட்டை ஒன்று சதாசிவனின் வலது கண்ணில் குத்தி ரத்தம் வழிந்தது.

அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது கண் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதற்கு சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இரண்டு கண்களின் பார்வையும் பறிபோகும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.

ஆனால் சாதாரண டீ வியாபாரியான சதாசிவத்தால் சிகிச்சை எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக தனது பார்வையை அவர் முற்றிலுமாக இழந்தார்.

இவரின் மூத்த மகன் படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு மகன் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்குப் பேச்சு வாராது. மூன்றாவதாக ஆர்யா என்ற மகள் உள்ளார்.

சதாசிவன் கண் பார்வை இழந்திருப்பதால் குடும்பம் செய்வதறியாது தவித்து வருகிறது

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவருக்கு உதவ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.