புதுச்சேரி..

புதுச்சேரி உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியநாதன் (53). இவரது மனைவி மரிய லூர்தியா (52). இவர்களது மகன் பிரான்கோ (28), மகள் லூர்துமேரி (16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இதற்கிடையே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மரியலூர்தியா, லூர்துமேரி ஆகியோர் உடலில் திடீரென தீப்பற்றி எரிந்து அலறித்துடித்தனர். அப்போது வீட்டில் மற்றொரு அறையில் இருந்த ஆரோக்கியநாதன், பிரான்கோ ஆகியோர் ஓடிவந்து அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டனர்.

அவர்களை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மரியலூர்தியா, லூர்துமேரி ஆகியார் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையே லூர்துமேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மரியலூர்தியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் கொசுபத்தி கொளுத்தியபோது ஏற்பட்ட தீயில் உயிரிழந்ததாக தெரிகிறது.

இருந்தபோதிலும் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆரோக்கியநாதன், மனைவியை கொலை செய்யும் நோக்கில் செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.