மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்

அந்தியூரில் சமையல் செய்ய மறுப்பு தெரிவித்த மனைவியை மண்வெட்டியால் கணவன் வெட்டி கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொல்கத்தா ஹசனாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் ரோஹித் காஜா (34) – தோமினா (30) தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தா பகுதியை சேர்ந்த சில தொழிலாளர்களுடன் சேர்ந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தாசரியூர் பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்ய வந்தனர்.

கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று செங்கல்சூளையில் நின்று கொண்டிருந்த ரோஹித், மதிய நேரம் ஆகிவிட்டது என மனைவியை சமையல் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு தோமினா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த ரோஹித் உடனடியாக மண்வெட்டியை கொண்டு, தோமினாவின் தலையில் வெட்டியுள்ளார். இதனை பார்த்த சக ஊழியர்கள் உடனடியாக தோமினாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட தோமினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் தலைமறைவாகியுள்ள ரோஹித்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.