நாகை…..
நாகை மாவட்டம் திருக்குவளை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை இரவு திருக்குவளை கடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, வாழக்கரை பகுதியில் ஒரு கார் பழுதடைந்த நிலையில் சேற்றில் சிக்கி நிற்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்று செந்தில், காரை மீட்கும் முயற்சியை மேற்கொண்டார். அப்போது அந்த காரில் வந்திருந்த பாங்கல் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் மகன் விக்னேஷ்(29) என்பவர், தனது மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது காரை எடுக்க உதவாமல், ஏன் மனைவியிடம் சண்டை போட்டுக்கொள்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த அவர் என் மனைவியை நான் திட்டுவதால் உங்களுக்கு என்ன என்று கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாய்த்தகராறு முற்றி, ஆத்திரம் அடைந்த விக்னேஷ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்திலை தாக்கியதுடன், கன்னத்தையும் கடித்துள்ளார். இதில் காயம் அடைந்த செந்தில் திருக்குவளை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில் அளித்த புகாரின்பேரில், திருக்குவளை போலீசார் விக்னேஷ்(29) மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.