தற்கொலை செய்த பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம் : தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!

390

சென்னை….

மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார்.

சென்னை அடுத்த மாங்காடு சக்தி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சனிக்கிழமை காலை அவரது தாய் கடை வீதிக்கு சென்றிருந்த நேரம் மாணவி மட்டும் அவரது அறையில் தனியாக இருந்தார்.

கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அறைக்குள் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்து கதவை தட்டி பார்த்துள்ளார்,

உள்பக்கமாக பூட்டப்பட்ட கதவு திறக்கப்படாததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாங்காடு போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த சில தினங்களாக அந்த மாணவி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல், புதிய தோழிகளிடம் பேசியதாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் எழுதிய இரண்டு கடிதங்கள் சிக்கியது அதில் தான் முன்பு படித்த தனியார் பள்ளியில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை மறக்க முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லை என்று வேதனை தெரிவித்துள்ள அந்த மாணவி இந்த உலகில் உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக் கூடாது என்றும் இந்த உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பானது கல்லறையும், தாயின் கருவறை தான் எனவும் பள்ளியில் பாதுகாப்பு இல்லை எனவும் உருக்கமாக எழுதி வைத்திருந்தார்.

போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது 3 வதாக ஒரு கடிதம் கிழித்துபோடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அதனை அந்த மாணவி எழுதி விட்டு கிழித்து போட்டு இருந்தது தெரியவந்தது.

அதில் முன்பு படித்த தனியார் பள்ளியில் தனக்கு பாலியல் டார்ச்சர்களை சுட்டிக்காட்டி இருந்த அவர், அங்குள்ள ஆசிரியையின் மகன் தான் இதற்கு காரணம் எனவும் பெயர் குறிப்பிடப்படாமல் அவனை சும்மா விடக்கூடாது என்று எழுதியிருந்தார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் கூறுகையில் தனது மகள் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அங்கிருந்த தனியார் பள்ளியில் படித்து வந்ததாகவும்,

அங்கு கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்து படித்து வந்ததாகவும் அமைதியான பெண் எனவும் தெரிவித்த மாணவியின் பெற்றோர் மேலும் தனது மகள் மூன்றாவது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த மாணவன் அந்த தனியார் பள்ளி ஆசிரியையின் மகன் எனவும் அந்த மாணவனை கண்டுபிடித்து அவனுக்கு தூக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதனிடையே மாணவி படித்த தனியார் பள்ளியில் உதவி ஆணையர்,ஆய்வாளர் கொண்ட குழுவினர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் மற்றும் ஆசிரியர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் மாணவி பயன்படுத்தி வந்த செல்போனையும் ஆய்வு செய்த போலீசார் மாணவி குறிப்பிட்டுள்ள அந்த ஆசிரியையின் மகனை பிடித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

பள்ளி மாணவிகள் தங்களுக்கு நேர்கின்ற பாலியல் தொல்லை குறித்து தங்களது பெற்றோரிடம் தைரியமாக கூறலாம் என்றும் அவர்கள் மூலம் காவல்துறையை அணுகினால் உறுதியா நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள போலீசார் இது போன்ற விபரீத முடிவுகளை தேடிக் கொள்வதை மாணவிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.