தாயையும் மகனையும் காக்கும் முயற்சியில் உயிரிழந்த இலங்கை வம்சாவளிச் சிறுவன் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

935

இலங்கை வம்சாவளிச் சிறுவன் ஒருவன் கனடாவில் நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும் காப்பாற்றும் முயற்சியில் வீர மரணமடைந்தார்.

கைல் ஹாவர்டு முத்துலிங்கம் (16) Wexford Collegiate பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்றவர். ஒண்டாரியோ ஏரியில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்தவர்களில் கைல் முத்துலிங்கமும் ஒருவர்.

தொடர்ந்து வந்த மீட்புக்குழுவினர் மொத்தம் ஐந்து பேரை மீட்டனர். அவர்களில் கைல் முத்துலிங்கமும் ஒருவர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த தாயும் மகனும் உயிருடன் மீட்கப்பட்டு விட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முத்துலிங்கம் பின்னர் உயிரிழந்தார்.

மிகவும் இரக்க குணம் படைத்தவர் என பள்ளியில் அனைவராலும் புகழப்படும் கைல் முத்துலிங்கத்தின் மரணம் அவர் பயின்ற பள்ளியிலும் அவரது குடும்பத்தாரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கைல் முத்துலிங்கம் பயின்ற பள்ளியில் கனடா கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைல் முத்துலிங்கத்தின் ஒன்று விட்ட சகோதரிகளான அபிநயா (16) மற்றும் அஸ்வியா லிங்கம் (15) ஆகியோர் தங்கள் துக்கத்தின் மத்தியிலும் தங்கள் சகோதரனைக் குறித்து புகழ்ந்துரைத்துள்ளனர்.

இந்த நாடு என் சகோதரனை ஒரு ஹீரோவாக அறிந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, ஏனென்றால் அவன் உண்மையிலேயே ஒரு ஹீரோதான் என்று கூறுகிறார் அபிநயா.

தாங்கள் இருவரும் இரட்டையர்கள் போலவே வளர்ந்ததாகவும், சேர்ந்து கால் பந்து விளையாடியதாகவும் தெரிவிக்கும் அபிநயாவும் கைல் முத்துலிங்கம் படித்த அதே பள்ளியில் படித்தவர்தான்.

நடனம் ஆடுவதும் பாடல் பாடுவதும் கைல் முத்துலிங்கத்திற்கு மிகவும் பிடிக்கும் என்று கூறும் அவர்கள், கலைகளில் சாதனை படைப்பதற்காகத்தான் அவர் இந்த பள்ளியில் சேர்ந்தார் என்கிறார்கள்.