திருமணத்தை நிறுத்திய இளைஞர் : நிவாரண முகாமாக மாறிய திருமண வீடு!!

927

பெருவெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ஞாயிறன்று நடக்கவிருந்த தமது திருமணத்தை நிறுத்திவிட்டு வீட்டை நிவாரண முகாமாக மாற்றியுள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலம் நூற்றாண்டு காணாத பெரு மழையால் தத்தளிக்கிறது. 13 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓணப்பண்டிகை கொண்டாட வேண்டிய கேரள மக்கள் கண்ணீருடனும், கதறலுடனும் முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

நாள் குறித்து கனவுகளுடன் காத்திருந்த வாழ்க்கையின் பல முக்கிய நிகழ்வுகளையும் கேரள மக்கள் வேறு திகதிகளுக்கு மாற்றியுள்ளனர். பலரும் திகதி தெரிவிக்காமல் ரத்து செய்துள்ளனர்.

ஆனால் கோட்டயம் மாவட்டத்தில் குடியிருக்கும் ஜயதீப் என்ற இளைஞர் ஒருபடி மேலே சென்றுள்ளார்.

தமது திருமணத்தை வேறு திகதிக்கு மாற்றியது மட்டுமின்றி, திருமணத்திற்காக தயார் நிலையில் இருந்த வீட்டை நிவாரண முகாமாகவும் மாற்றியுள்ளார்.

19-ஆம் திகதி ஞாயிறன்று ஜயதீபின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுவட்டாரம் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் பெருவெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் திருமணத்தை வேறு திகதிக்கு மாற்றியுள்ளார்.

மட்டுமின்றி திருமணத்திற்காக வாங்கப்பட்ட உணவுப் பொருட்களை நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தவர்களுக்காக சமைத்து அதை விநியோகம் செய்யவும் நண்பர்களுடன் புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.