தென் ஆப்பிரிக்காவை வாட்டி வதைக்கும் கடும் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மீட்க நிபுணர்கள் அதிரடி திட்டம் ஒன்றுடன் களமிறங்கியுள்ளனர்.
குறித்த திட்டத்தின்படி அண்டார்டிக்காவில் இருந்து பாரிய பனிப்பாறை ஒன்றை கடல்வழியாக தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப் டவுனுக்கு எடுத்துச் செல்ல நிபுணர்கள் குழு முடிவு செய்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் 2015 தொடங்கி அங்கு தேசிய பேரிடர் காலம் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மட்டுமின்றி தண்ணீரை பயன்படுத்துவதற்கும் கடும் கட்டுப்பாடுகளையும் அந்த நாட்டு அரசு பொதுமக்களுக்கு விதித்துள்ளது.மேலும், அடுத்த ஆண்டிலும் தென்னாப்பிரிக்காவுக்கு மழைக்காலம் இல்லை எனவும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே இதுவரை எவரும் யோசிக்காத இந்த திட்டத்துடன் Nick Sloane என்பவர் அரசை அணுகி தனது திட்டத்திற்கு ஒப்புதல் வாங்கியுள்ளார். மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும் குறித்த திட்டத்தில் பங்குபெற கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இத்தாலிய பயணிகள் கப்பல் கவிழ்ந்த நிலையில் அதை அதிரடியாக மீட்டவர் இந்த Nick Sloane என்பவரே.
இந்த திட்டம் தொடர்பாக பேசிய Sloane, தமது குழுவினரால் பனிப்பாறை ஒன்றை எந்த சேதாரமும் இன்றி கேப் டவுன் வரை கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேப் டவுனில் இருந்து பாரிய தண்ணீர் லொறிகளில் தேவையான பகுதிகளுக்கு அனுப்பலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பனிப்பாறையால் ஒரு நாளுக்கு 150 மில்லியன் லிற்றர் தண்ணீரை ஓராண்டுக்கு தர முடியும் எனவும் இது ஒரு நகரத்தின் 30 விழுக்காடு தேவையை பூர்த்தி செய்யும் எனவும் அமெரிக்க நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.