தொடரும் ஆணவக்கொலை : தமிழகத்தை சேர்ந்த காதல் ஜோடி கர்நாடகாவில் பிணமாக கண்டெடுப்பு.!!

1011

ஆணவக்கொலை

ஒசூரை சேர்ந்த காதல் தம்பதிகள் கர்நாடகா மாநிலத்தில் காவேரி ஆற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இவர்கள் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒசூர் அருகேயுள்ள சூடகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாராணப்பா என்பவரது மகன் நந்தீஸ்(25). அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரது மகள் சுவாதி(20). இவர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு இனத்தை சேர்ந்தவர்கள். அதனால், கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து ஒசூர் ராம்நகரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து இரண்டு பேரும் வசித்து வந்தனர். நந்தீஸ் ஒசூரிலுள்ள இரும்புகடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 10ம் தேதி முதல் நந்தீஸ் மற்றும் சுவாதி இருவரும் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து இரும்புக்கடை முதலாளி மூலம் தகவல் அறிந்த நந்தீஸின் தம்பி சங்கர், தனது அண்ணனையும் அவரது மனைவியும் கண்பிடித்து கொடுக்குமாறு ஒசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஒசூர் பகுதி போலீஸார் நந்தீஸ் – சுவாதி ஆகிய இருவரையும் பல இடங்களில் தேடிவந்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம் பெலகவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி ஆற்றில் நந்திஸ் – சுவாதி இருவரும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இருவரது உடல்களை மீட்ட பெல்காவாடி போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். இதில், இருவரும் ஒசூர் அருகேயுள்ள சூடகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி என தெரிய வந்தது.

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை உறவினர்கள் கடத்தி சென்று ஆணவக் கொலை செய்திருக்கலாம் என்று கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.