கேவாடியா…

நாட்டின் பிற நகரங்களைக் குஜராத்தின் கேவாடியா நகருடன் இணைக்கும் வகையில் 8 ரயில்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலியில் தொடக்கி வைக்கிறார்.

குஜராத்தில் மிக உயரமான வல்லப் பாய் பட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்குச் சென்னை, வாரணாசி, மும்பை தாதர், அகமதாபாத், டெல்லி ஹசரத் நிசாமுதீன், ரேவா ஆகிய நகரங்களில் இருந்து விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் குஜராத்தின் பிரதாப் நகர் – கேவாடியா இடையே 2 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த 8 ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார். இதேபோல் தாபோய் – சாண்டோடு இடையிலான அகலப்பாதை, பிரதாப் நகர் – கேவாடியா இடையிலான மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதை ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.

தாபோய், சாண்டோட், கேவாடியா ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய ரயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.
பிரதாப் நகர் – கேவாடியா இடையே 75 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதை அமைத்து நிலையங்கள் கட்டும் திட்டம் 811 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனாலும், நாட்டின் பிற நகரங்களுக்குக் கேவாடியாவில் இருந்து விரைவு ரயில்கள் இயக்கப்படுவதாலும் நர்மதை மாவட்டத்தின் சமூக – பொருளாதார நிலை மேம்படும் எனக் கருதப்படுகிறது.