தமிழகத்தில் பள்ளிக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வந்த பெண், வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சென்னை மாதவரம் அடுத்த கொசப்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி மனோஜ் குமார்-நந்தினி.மனோஜ் அங்கிருக்கும் பகுதியில் டீ கடை நடத்தி வருவதால், நந்தினி தான் வீட்டின் பொறுப்புகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கப்பட்டதால், பள்ளிக்கு சென்றிருந்த குழந்தைகளை அழைத்து வர நந்தினி சென்றுள்ளார்.
குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது, பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளார்.
இதனால் உடனடியாக இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அப்போது பொலிசார் நடத்திய விசாரணையில், வீட்டிலிருந்து 30 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி பீரோவில் இருந்த 1.36 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.