அமெரிக்கா……….
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் திடீரென்று மரணமடைந்த பாட்டியின் சடலத்துடன் பிஞ்சு சிறுவர்கள் இருவர் ஒரு வார காலம் வாழ்ந்து வந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் டால்டி பகுதியில் குடியிருந்து வந்தவர் 71 வயதான கோனி டெய்லர்.
தனித்து வாழ்ந்து வந்த இவர் சுமார் ஒரு மாதம் முன்பு சிறார் காப்பகம் ஒன்றில் இருந்து 5 வயது மற்றும் 7 வயது சிறுவர்கள் இருவரை தத்தெடுத்துள்ளார்.
குறித்த சிறார்கள் இருவரையும் தமது பிள்ளைகள் போன்றே மிகுந்த அக்கறையுடனும் பாசத்துடனும் கவனித்து வந்துள்ளார் கோனி டெய்லர்.இந்த நிலையில், செப்டம்பர் துவக்கத்தில் கோனி டெய்லர் திடீரென்று மரணமடையவே, சிறார்கள் இருவரும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
மட்டுமின்றி, அவரது மொபைல்போன் இவர்கள் இருவரால் பயன்படுத்த முடியாமல் போகவே, இருவரும் உதவ ஆளின்றி தனித்து ஒரு வார காலம் பாட்டியின் சடலத்துடனே வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனிடையே, சிறுவர்கள் இருவரும் ஒரு வாரகாலமாக பாடசாலைக்கு வரவில்லை என்பதை அறிந்த ஆசிரியர் ஒருவர், சிறார்கள் தொடர்பில் விசாரித்துள்ளார்.
இந்த நிலையிலேயே கோனி டெய்லர் மரணமடைந்துள்ளதும், உதவிக்கு எவரும் இல்லாத நிலையில், சிறார்கள் சடலத்துடன் சிக்கிக் கொண்டதும் அம்பலமானது.
தற்போது சிறுவர்கள் இருவரும் காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கோனி டெய்லரின் பிள்ளைகளை குறித்த சிறார்களை தங்களுடன் வாழ அனுமதிக்க கோரி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சிறார்கள் தொடர்பில் அக்கறை கொண்டு விசாரித்த பாடசாலை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அவர் சிறார்களை விசாரித்ததாலையே, இச்சம்பவம் ஒரு வாரம் கடந்த நிலையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.