பைசர்………..
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜேர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 90 சதவிகிதம் செயல் திறன் வாய்ந்தது என்ற செய்தி வெளியாகி மகிழ்ச்சியை அளித்த அதே நேரத்தில், உஷ்ணமான நாடுகளுக்கு அந்த மருந்தை அனுப்புவதில் சிக்கல் உள்ளது என்ற செய்தியும் வெளியாகி கடும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
அதாவது, அந்த தடுப்பூசி, வைரஸின் RNAவை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், அதை -94F முதல் -112F (-70C முதல் -80C வரை) வரையிலான மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமித்துவைக்கவேண்டியிருக்கும்.
ஆகவே, அதை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த செய்தி கொரோனா தடுப்பூசி தயாரான மகிழ்ச்சியையும் தாண்டி ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்நிலையில், தற்போது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொருத்தவரை, உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்த உடன்தானே, இந்த தடுப்பூசி தேவைப்படும் இடத்துக்கு அனுப்பிவைக்கப்படுவிடும்.
ஆகவே, அமெரிக்கர்களைப் பொருத்தவரையில், அவர்கள் கொரோனா தடுப்பூசிக்காக நாள் கணக்கில் காத்திருக்கவேண்டியதில்லை, சில மணி நேரத்தில் தடுப்பூசி அவர்களை சென்றடைந்துவிடும்.
பைசர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான Albert Bourla இது குறித்துக் கூறும்போது, கொரோனா தடுப்பு மருந்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்புவதற்காக தங்கள் நிறுவனம் ஒரு விசேஷித்த பெட்டியை தயாரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
வெப்பநிலை மாறாத, GPS பொருத்தப்பட்ட இந்த பெட்டிகளில், வெப்பநிலையைக் காட்டும் ஒரு கருவியும் பொருத்தப்பட்டிருக்கும். ஆகவே, இந்த பெட்டிகளில் வைத்து தடுப்பூசிகள் அனுப்பப்படும்போது, அவை எங்கிருக்கின்றன, என்ன வெப்பநிலையில் இருக்கின்றன என்பதையும், தவறு ஏதேனும் நிகழ்கிறதா என்பதையும் கண்காணிக்கலாம்.
அப்படி ஏதாவது தவறு நிகழ்ந்தால், அந்த மருந்து பயன்பாட்டுக்கு அனுப்பப்படாது என்றும் கூறியுள்ளார் Bourla. ஒரு பெட்டியில் 1,000 முதல் 5,000 பேருக்கு செலுத்தும் அளவிலான தடுப்பு மருந்தை வைக்கலாம். இந்த பெட்டிகளிலேயே வெப்பநிலைக் கட்டுப்பாடு உள்ளதால், அவற்றை அப்படியே லொறிகள், விமானங்கள் மற்றும் படகுகளிலும் அனுப்பலாம்.
அத்துடன், இந்த பெட்டிகளிலேயே மருந்து வைக்கப்படும் நிலையில், அவை பல நாட்களுக்கு அப்படியே வைக்கப்படலாம், அவற்றை ப்ரீசர்களில் வைத்தால் பல மாதங்களுக்கு வைக்கலாம், குளிர்பதனப்பெட்டியில் (refrigerator) வைத்தால் சில நாட்களுக்கு இந்த தடுப்பு மருந்தை வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மீண்டும் ஒரு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க இயலாது.