மனைவியுடைய கார்டை கணவன் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.பெங்களூருவை சேர்ந்தவர்கள் வந்தனா மற்றும் ராஜேஷ் குமார். தம்பதிகளான இவர்களில் வந்தனா கடந்த 2013 நவம்பர் 14 ஆம் தேதியன்று ரூபாய் 25, 000 பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
அதனை எடுத்து கொண்டு எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றிருக்கிறார் ராஜேஷ். ரூபாய் 25,000 பணம் எடுக்கப்பட்டதாக ரசீது மட்டுமே அந்த மெஷினிலிருந்து வந்திருக்கிறது. பணம் வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் எஸ்பிஐ வங்கியின் உதவி மையத்திற்கு அழைத்து நடந்ததை கூறியுள்ளார். உதவிமையத்தினரும் பணத்தை கணக்கில் வரவு வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். அடுத்த நாள் ஆகியும் பணம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனை அடுத்து வங்கிக்கு சென்று கேட்ட போது உங்கள் பணத்தை தர முடியாது என்று நிர்வாகம் கூறியிருக்கிறது.
ஏன் என்று கேட்டபோது உங்கள் மனைவியின்ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி நீங்கள் பணம் எடுக்க முயன்றது எங்கள் விதிமுறைப்படி தவறான செயல். ஆகவே உங்கள் பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறியிருக்கிறது வங்கி நிர்வாகம்.
இதனையடுத்து கடந்த 2014 ஆண்டு அக்டோபர் மாதம் ராஜேஷ் வந்தனா தம்பதி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணையில் சிசிடிவி காட்சிகளும் கணவன் பணம் எடுக்க போகும்போது பணம் வரவில்லை என்பதையே காட்டியுள்ளது. இருப்பினும் வங்கி தரப்பில் தங்களது ரகசிய குறியீட்டு எண்ணை மற்றவர்களிடம் பகிர்வது தவறு என்றும் ஆகவே இதற்கான பணத்தை தாங்கள் திருப்பி தர மாட்டோம் என்று கூறியது.
வழக்கு மூன்றரை வருடங்கள் கடந்த நிலையில் இன்று இதற்கான தீர்ப்பு வெளியானது. அதன்படி மனைவி வந்தனா கணவரிடம் காசோலையோ அல்லது கடிதமோ கொடுத்து பணம் எடுத்து வர சொல்லியிருக்கலாம். தனதுஏடிஎம்மின் பர்சனல் எண்ணை கணவரிடம் பகிர்ந்து தவறு என்று தீர்ப்பு வழங்கியது.
ஆகவே இனிமேல் மனைவியின் ஏடிஎம் கார்டை கணவர் பயன்படுத்தினாலோ மற்ற உறவுகள் பயன்படுத்தினாலோ பணம் வெளிவந்து விட்டால் பிரச்னை இல்லை. வராத பட்சத்தில் பணம் மீண்டும் வங்கியிடம் இருந்து பெறுவது என்பது முடியாது.