முட்டையால் கண்பார்வையை இழந்த இளம்பெண்!!

535

கண்பார்வையை இழந்த இளம்பெண்

பிரித்தானியாவில் முட்டை திடீரென வெடித்ததால் இளம்பெண் தற்காலிகமாக கண் பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Newcastle நகரை சேர்ந்தவர் கோர்ட்னி வுட் (19). இவர் கடந்த 26ஆம் திகதி பாக்சிங் தினத்தன்று தனது வீட்டில் இருந்த மைக்ரோ ஓவன் உள்ளே முட்டையை வைத்துள்ளார்.

பின்னர் முட்டையை அங்கிருந்து வெளியில் எடுத்தபோது திடீரென முட்டை வெடித்தது. இதில் கோர்ட்னியின் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. இதையடுத்து வலியால் துடித்த கோர்ட்னி முகத்தில் குளிர்ந்த நீரை ஊற்றி கொண்டபின் நண்பருக்கு போன் செய்துள்ளார். இதன்பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கோர்ட்னியின் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டதும், ஆனால் இது தற்காலிகமானது தான் எனவும் தெரியவந்தது. சில நாட்கள் மருத்துவமனையில் கோர்ட்னி தங்கி சிகிச்சைபெற்ற நிலையில் வலது கண் பார்வை முழுவதுமாக குணமானது. ஆனால் இடது கண்ணில் தொடர்ந்து அவருக்கு பிரச்சனை உள்ளது.

இது குறித்து கோர்ட்னி கூறுகையில், கண் மருந்துகளும், மாத்திரைகளும் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் நான் கண் மருத்துவரை சென்று பார்க்கவேண்டும், இடது கண் முழுவதுமாக குணமாக சில வாரங்களோ அல்லது அதற்கு மேலாக கூட ஆகலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். என் வாழ்க்கையில் நான் அனுபவித்த பயங்கரமான வலி இதுதான், இது போல யாருக்கும் நடக்கக்கூடாது என கூறியுள்ளார்.