இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் சந்திர கிரகணத்தை ஒட்டி தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக கும்பல் ஒன்று தங்களது நண்பனையே நரபலியிட துணிந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த கும்பலிடமிருந்து தப்பி வந்த இளைஞர் பொலிசாரிடம் புகார் அளித்ததை அடுத்து குறித்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், நூஜ்கோடு காவல் நிலைய எல்லையில் உள்ள எலவந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாய தொழிலாளியான பிரதீப்(32).
இதே பகுதியில் உள்ள ராம்பிரசாத் என்பவருக்கும் அவரது நண்பர்கள் சிலருக்கும் தங்கள் வாழ்வில் சிறப்பான வளர்ச்சியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அருகில் உள்ள மந்திரவாதியை அணுகியுள்ளனர். அவர் ஒரு மோசமான ஆலோசனையை அளித்துள்ளார்.
குறிப்பிட்ட நட்சத்திரம், சில அம்சங்கள், வீட்டின் தலைமகன் போன்ற பல அம்சங்களை கூறி அப்படி ஒரு இளைஞரை பலி கொடுத்தால் விசேஷ சக்திகள் பெறலாம் வாழ்வில் சுபிட்சம் பெருகும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
மந்திரவாதி கூறிய அத்தனையும் தனது நண்பன் பிரதீப்புக்கு பொருந்துவதை ராம்பிரசாத் கண்டுள்ளார். இதுப்பற்றி தனது நண்பர்களுக்கும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நண்பர் என்றும் பாராமல் பிரதீப்பை பலிகொடுக்க முடிவு செய்துள்ளனர். சந்திரகிரகணத்தின் உச்சத்தில் பிரதீப்பை நரபலி கொடுத்தால் விசேஷ சக்தி கிடைக்கும் என்று முடிவெடுத்து பிரதீப்பை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக எலவந்தல் கிராமத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள கோவிலில் நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
நரபலி கொடுத்த பின்னர் உடலை அங்கேயே புதைக்கவும் குழி தோண்டியுள்ளனர். நேற்று சந்திரகிரகணத்தை ஒட்டி காட்டுக்குள் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டால் வாழ்க்கையில் எல்லா ஐஸ்வர்யங்களும் வரும் வா சாமி கும்பிடலாம் என்று ராம்பிரசாத் நண்பன் பிரதீப்பை அழைத்துள்ளார். அவரும் சம்மதித்து உடன் சென்றுள்ளார். அவருடன் அதே கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் 5 பேரும் சென்றுள்ளனர்.
ஏழு பேரும் நள்ளிரவில் அடர்ந்த காட்டுக்குள் செல்ல அங்குள்ள கோவிலுக்கு சென்றபோது மேலும் மூன்று புதிய நபர்கள் வந்துள்ளனர்.
அங்குள்ள சூழ்நிலை பயங்கரமாக இருந்ததை பிரதீப் பார்த்துள்ளார். புதிதாக வந்த 3 பேர் கையில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்துள்ளனர்.
கோவில் அருகிலேயே ஒரு ஆளை புதைக்கும் அளவுக்கு குழியும் தோண்டி வைக்கப்பட்டிருந்தது.
ராம்பிரசாத்திடம் இதுப்பற்றி பிரதீப் கேட்டுள்ளார். ஆனால் ராம்பிரசாத் மழுப்பியுள்ளார். பின்னர் பிரதீப்பை குளிக்கும்படி கூறியுள்ளனர்.
நம்மை மட்டும் எதற்கு நள்ளிரவில் குளிக்கும்படி கூறுகின்றனர், என சந்தேகம் அடைந்த பிரதீப் மெல்ல அங்கு நடப்பதை நோட்டமிட்டபோது அவரை நரபலி கொடுக்க முயல்வது தெரிந்து அவர்களிடமிருந்து தப்பி காட்டுக்குள் ஓடியுள்ளார். அவரை மற்ற அனைவரும் விரட்டியுள்ளனர்.
காட்டுக்குள் பல கிலோ மீட்டர் ஓடி சாலைக்கு வந்த பிரதீப் அப்போது எதிரில் வந்த ஆட்டோவை மடக்கி அதில் ஏறி நூஜ்கோடு காவல் நிலையத்துக்கு வந்துளார்.
அவரிடம் நடந்ததை கேட்டறிந்த பொலிசார், பின்னர் பிரதீப்பை அழைத்துக்கொண்டு அவரது கிராமத்திற்கு சென்று ராம்பிரசாத் உள்ளிட்ட அவரது நண்பர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
அவர்களிடம் பொலிசார் பிரதீப் கூறியது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திர கிரகணத்தில் உடன் பழகும் நண்பனையே நரபலியிட முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.