பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை இந்தியர் என்றும், லண்டன் மருத்துவர் என்றும் கூறி இந்திய பெண்ணொருவரை திருமணம் செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண்ணொருவர், தனக்கு திருமண வரன் தேடுவதற்காக திருமண தகவல் மைய இணையதளம் ஒன்றில், தனது புகைப்படத்துடன் தன்னை குறித்த விவரங்களை பதிவிட்டுள்ளார்.
அதனைக் கண்ட இளைஞர் ஒருவர், குறித்த பெண்ணை தொடர்பு கொண்டு அவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் தான் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் என்றும், லண்டனில் தற்போது மருத்துவராக பணிபுரிந்து வருவதாகவும் குறித்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
மேலும், தான் விரைவில் இந்தியா வந்து அவரை திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களது கைப்பேசி எண்களை பரிமாறிக் கொண்டு பேச தொடங்கியுள்ளனர்.
குறித்த பெண், அந்நபருக்கு நாக்பூரைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாத விடயத்தை அவரது பேச்சிலேயே கண்டு கொண்டுள்ளார். மேலும், குறித்த இளைஞர் தனது விவரங்களை மறைக்க முயன்றதுடன், ஆபாசமாக பேசியது அப்பெண்ணிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்த இளைஞர் பணிபுரிவதாக கூறிய லண்டன் மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை, இணையதளங்களில் தேடிப் பிடித்த குறித்த பெண், அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
தங்களது மருத்துவமனையில் அப்படி ஒரு நபர் பணிபுரியவில்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், இளைஞர் அனுப்பிய புகைப்படத்தில் இருந்த தொலைபேசி எண்ணை கவனித்த குறித்த பெண், அதில் தொடர்பு கொண்டு பேசிய போது அது பாகிஸ்தானில் இருப்பது தெரிய வந்தது.
பின்னர், தான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்றும், தனக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த இளைஞருடன் பேசுவதை மும்பை பெண் தவிர்த்து வந்துள்ளார்.
ஆனால், குறித்த இளைஞர் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். மறுத்தால் தான் மும்பைக்கே வந்து கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்து போன மும்பை பெண், உள்ளூர் காவல் நிலையத்தில் பாகிஸ்தான் இளைஞர் மீது புகார் அளித்துள்ளார்.