வவுனியா மாணவிகள் தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டியில் சாதனை!!

338

வவுனியா – சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றி வெங்கலப்பதக்கத்தை வெற்றிபெற்று கிராமப்புறங்களில் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் இலைமறை காய்களாக பல திறமைகளுடன் கிராமப்புறங்களில் வாழும் மாணவர்கள் அண்மைக் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் 14 வயது பெண்கள் பிரிவில் போட்டியிட்டு மயில்வாகனம் பிளசிகா, ராஜசேகரம் வினோதா ஆகிய இரண்டு மாணவிகளும் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டிக்கு தேர்வாகி மொறட்டுவையில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வெங்கலப் பதக்கத்தை வெற்றி பெற்று பாடசாலைக்கும், வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்து கொடுத்துள்ளனர்.

முதல் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளை ஊக்கப்படுத்தும் முகமாக பாடசாலை சமூகமும், கிராம மக்களும் இணைந்து புதுக்குளம் சிவன் ஆலயத்திலிருந்து வாகன பேரணியுடன் கௌரவமாக அழைத்துவரப்பட்டு மாலை அணிவித்து கௌரவப்படுத்தும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.