விமான ஓடுதளத்திற்குள் பறந்த மர்ம ட்ரோன்கள்

பிரித்தானியாவின் Gatwick விமான ஓடுதளத்திற்குள் எதிர்பாராமல் நுழைந்த இரண்டு ட்ரோன்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், வரவேண்டிய விமானங்கள் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதால் பிரித்தானியாவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள், கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி பயணப்பட்டுள்ள நிலையில், Gatwick விமான ஓடுதளத்திற்குள் ட்ரோன்கள் பறந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டதையடுத்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

அந்த ட்ரோன்களை இயக்கும் பைலட்டைக் கண்டுபிடிப்பதற்காக விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள ஏராளமான பொலிசார், அந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தலாமா என்பது தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் ட்ரோன் ஒன்றை விமானம் ஒன்றில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் வீடியோவும் எடுத்துள்ளார்.

Gatwick விமான நிலையத்திற்கு வர திட்டமிட்டுள்ள பயணிகள், இன்னும் குறைந்தது 24 மணி நேரத்திற்காவது விமான போக்குவரத்துக்கு இடையூறு தொடரும் என்பதால், விசாரித்து விட்டு, பயணத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

நேற்று இரவு Gatwickஇலிருந்து பறக்கலாம் என்ற எண்ணத்தில் வந்த பல பயணிகள், விமான சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், ஹோட்டல்களும் நிரம்பி வழிந்ததால், விமான நிலையத்தின் தரையிலும், விமானங்களிலும் உறங்க வேண்டியதாயிற்று.

Gatwick விமான நிலையம் வந்திறங்க வேண்டிய பல பயணிகள், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ், Bordeaux, Cardiff, லிவர்பூல், மான்செஸ்டர், Stansted, Luton மற்றும் பர்மிங்காம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டு அங்கு விமானங்களிலேயே தங்கள் இரவைக் கழித்தனர்.

விமான நிலைய எல்லையிலிருந்து 1 கிலோமீற்றர் தொலைவுக்குள்ளும், 400 அடி உயரத்திற்கு மேலேயும் பறக்கும் ட்ரோன்களின் உரிமையாளர்கள் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுவார்கள்.

ட்ரோன்கள் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் மோதுவதாலோ அல்லது எஞ்சினுக்குள் உறிஞ்சப்பட்டோ மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார், விமான நிலையத்திலிருந்து ஐந்து மைல் தொலைவு வரை ட்ரோன்களை இயக்கும் நபரை கண்டுபிடிக்கும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

எதற்காக அந்த நபர் ட்ரோன்களை இயக்குகிறார், அவர் தீவிரவாத நோக்கம் கொண்டவரா அல்லது சுற்றுச்சூழல் அமைப்பு எதையாவது சேர்ந்தவர்கள் விமான போக்குவரத்துக்கு இடையூறு செய்வதற்காக இவ்வாறு செய்கிறார்களா என்றும் பொலிசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.