ஈரோடு….

ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (32). இவர் ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அப்போது அந்த ஓட்டலுக்கு அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த சிறுமியுடன் தண்டபாணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்த உடன் அந்த சிறுமியிடம் தண்டபாணி ஆசை வார்த்தை கூறி அவருடன் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.

அதோடு அந்த சிறுமியை கர்ப்பமும் ஆக்கியுள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தார்.

சிறுமியின் வயதில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இது குறித்து அந்த சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி நடந்த சம்பவத்தை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் மருத்துவர்கள் இது குறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பெயரில் தண்டபாணியை பிடித்து போலீசார் விசாரித்த போது சிறுமிக்கு 16 வயது ஆவது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து தண்டபாணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.