ஈராக் நாட்டில் 40 ஐஎஸ் மணமகள்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.ஈராக் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தலைநகரமாக விளங்கிய மொசூல் நகரம் கைப்பற்றப்பட்டதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கு தண்டனை அளிப்பதற்காக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம், 100 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து ஈராக் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு வெளிநாடுகளில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக சுமார் 40,000 பேர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. துருக்கி வழியாக பயணித்து ஈராக் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதில், குறிப்பாக பெண்கள் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் மணமகள் என அழைக்கப்பட்டனர். இவர்களை, பாலியல் தொழிலுக்கும், சந்தையில் விற்பனை செய்வதற்கும் தீவிரவாதிகள் பயன்படுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், சுமார் 40 மணமகள்கள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்ட அவர்களுக்கு சுமார் 10 நிமிடங்கள் மட்மே தங்களது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.
குற்றவாளி கூண்டில் நின்றிருந்த மணமகள்கள், நாங்கள் தீவிரவாத இயக்கத்தில் இணைந்தது தவறு, தெரியாமல் இணைந்துவிட்டோம் என உயிர்பிச்சை கேட்டுள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு உயிர்வாழ அனுமதி மறுக்கப்பட்டு, 40 மணமகள்களுக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.